Tuesday, April 22, 2014

மருத்துவம் பலவகை

மருந்தே உணவு உணவே மருந்து என்பது உண்மைதான். பலர் இக்காலத்தில் மருந்தையே - மாத்திரைகளையே- உணவாக-  உணவு அளவில் சாப்பிடுகின்றனர்.
                        தமிழரின் இயற்கை வாழ்வியலில்- இயற்கையான அளவான உணவே மருந்தாகவும் இருந்து நோய்களை வரவிடாமல் தடுப்பதாகவும் ( வருமுன் காப்போம்)  வந்துவிட்டால் போக்குவதாகவும் அமைந்துள்ளது.
வாழை இலை
                          வாழை இலையில் சாப்பிடுவதால் தலைமுடி கருக்கும். தலைவாழை இலை என்பது மிகவும் மென்மையான பகுதி என்பதால், அதன் பச்சையம் எளிதில் சூடாக இருக்கும் உணவுடன் கலக்கும்.
தலைமுடி கருக்க : நெல்லிமுள்ளியைப் பாலில் அரைத்து தலைக்குத்தேய்த்துக் குளி.
நரைமுடி கருக்க : மருதோன்றி (மருதாணி) இலைச்சாறு அல்லது பொன்பருத்தி  இலைச்சாறு தேய்த்துக் குளிக்கவும்.மருதோன்றி (மருதாணி) இலையை அரைத்து அடையாகத் தட்டித் தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து, எடுத்தவைத்து நாள்தோறும் முடிக்குத் தேய்க்கவும்.
2.இயற்கை மருத்துவம்:
அன்பர்களே! நாள்தோறும் ஒரு திருக்குறள் படியுங்கள்!
அன்பு இயற்கையானது. வன்பு செயற்கயானது. இனிமையோடும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும்  அன்போடும் வாழும் வாழ்க்கையே இயற்கையானது. அழுகையும் துன்பமும் புலம்பலும் சினமும் சீற்றமும் செயற்கையானவை. குழந்தை இயல்பாகச் சிரிக்கிறது.  பசியோ வலியோ உணரப்படும்போது முயற்சி செய்து அழுகிறது.
காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை. . . .  பேஸ்ட், பிரஷ்,  காஃப்பி,  மிக்சி,கிரைண்டர்,   கேஸ்,  ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் , ஃபாஸ்ட் ஃபூட்,  மெட்ரோ ரயில், ஸ்கூட்டர் / கார் , லேப்டாப், இண்டெர்நெட், மஸ்கிடோ காயில் . . . . . !  என்ன ? எல்லாம் அயல் மொழிச் சொற்களாய் இருக்கின்றனவே! என்கிறீர்களா? ஆம்!  அனைத்தும் அயல்! எல்லாமே செயற்கை!
“நம் ஊர்ப் புறங்களில் காலையில் எழுந்ததுமே செங்கல் தூள் அல்லது உப்புத்தூள் போட்டு பல் விளக்கிக் கண்ணுள்ளே விளக்கெண்ணெய் விட்டு... அடடா... பெரிய வேடிக்கைதான்!.” -என்று தமிழகச் சிற்றூர் மக்களை- தமிழர்களைக் கிண்டல் செய்து வானொலியில் ஒருவர் வெகுகாலம் பேசிக்கொண்டிருந்தார். இப்போது  உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?” என்று விளம்பரங்களில் கேட்கும் நிலைமைக்கு பசையாக்குநர்களே வந்துவிட்டார்கள்.
மனிதன் இயற்கையான வாழ்வை இழந்ததால் துன்பப் படுகிறான். உப்பு, கிராம்பு, கருவேலம்பட்டை  இடித்துக் கலந்து பற்பொடியாகப் பயன்படுத்தினால் பல்நோய்கள் வருமா? பயன்படுத்துவதில்லை. ஏன்? வேல மரமே தெரியாது! கருவேல மரம் எப்படித் தெரியும்? வேம்பை அயல் நட்டான் காப்புரிமைபெற்ற பின்னர் விழித்துக் கொண்டு மீட்பதற்குப் பல கோடி செலவிட்டவர்கள்தாமே நாம்! இயற்கை வாழ்வுக்குத் திரும்புவோம்.  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!” ஆலங்குச்சி அல்லது வேலங்குச்சியால் பல் விளக்குங்கள்!  

3. மூச்சுப் பயிற்சி :
நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, ஓகப்பயிற்சி, தியானம் முதலியன செய்வது உடல்நலத்திற்கு உதவக்கூடியன. மூச்சுமருத்துவம் என்பது  “மோக்சா” மருத்துவம் எனச் சீனாவில் வழங்குகிறது. மூச்சுப் பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும், முறைப்படி பிரணாயாமம் ஆசனம் முதலியன தெரியாதவர்களும், உடல்நலம் இல்லாதவர்களும் கூட  செய்யத்தக்க மூச்சுப்பயிற்சி : நல்ல காற்று வீசுகிற ஓரிடத்தில் நிமிர்ந்து அமரவும். வாயை நன்கு மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்அண்ணத்துடன் அழுத்தி வைத்துக் கொள்ளவும். கண்ணை மூடிக்கொள்ளவும். மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில நொடிகள் உள் வைத்திருக்கவும் பின் இழுத்த நேரத்தைவிட அதிகமாக  மூச்சை  மிக மென்மையாக வெளியே விடவும். இப்படி 30 முறை செய்யவும். நாள்தோறும்  காலை மாலை இந்த மூச்சுப் பயிற்சி செய்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.  -  கல்விக்காவலர் கி.துளசி ஐயா வாண்டையார், பூண்டி, தஞ்சை மாவட்டம்.

4. இசைமருத்துவம்:
மது முன்னோர்கள் பலநோய்களைக் குணமாக்கத் தேவாரம் திருவாசகம் ஆழ்வார் பாடல்கள் போன்றவற்றை வீடுகளில்  பாடினர்.  இக்காலத்தில் மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும்  வேளாண்மையில் செடிகொடிகள் நன்கு வளரவும், மனிதர்களுக்கு நோய்கள் தீரவும், கர்ப்பினிகளுக்கு நன்கு குழந்தை பிறக்கவும்  இசையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட நோய்களுக்குக் குறிப்பிட்ட இசை எனத் தேர்ந்தெடுத்து அதை செவிக்கருவியில்பொருத்தி நாள்தோறும் சில மணி நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பார்கள். இந்த இசை மருத்துவம் நோய்கலைக் குணமாக்க உதவுகிறது. 


5. தண்ணீர் மருத்துவம்:
               காலை வெறும் வயிற்றில் 500 மில்லி ( 3 குவளை) தண்ணீர் குடிப்பது நல்லது; மாலை 8 மணிக்கு முன்னர் முன்று நான்கு முறை குடிப்பதும் நல்லது; சளிவாகு உள்ளவர்கள் இரண்டுமுறை மட்டுமே குடிக்கவும். நீர் குடித்த ஒருமணி நேரத்திற்குப் பின்னர்  சாப்பிட வேண்டும்; அல்லது சாப்பிட்ட 1 மணி நேரத்திற்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்; சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது; பேசக் கூடாது. மண்பானையில் குடிதண்ணீரில் வெட்டிவேர், விளாமிச்சி வேர் போட்டு வைத்திருந்தால் மணமாக இருக்கும்; உடலுக்குக் குளிர்ச்சியும் தரும். 1 ஏலக்காய், 2 கிராம்பு, 2 சீரகம் போட்டு வைத்தால் மணமும் இருக்கும்; வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை.

6. எண்ணெய் மருத்துவம்:
“சனி நீராடு” என்று ஔவை கூறியுள்ளார். எனவே சனிக்கிழமை மட்டுமே நீராடல் – குளியல் – எனக் கூறி  சனிக்கிழமை மட்டும்தான் குளியல் என முடிவு செய்யாதீர்கள்! பிறகு உங்கள் துணிமணிகள் நாறும், வீடே நாறிவிடும்! “புறந்தூய்மை நீரான் அமையும்” என்பார் திருவள்ளுவர். நாள்தோறும்  குளிப்பதுதான் நல்லது. சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும். எண்ணெய் என்றால் எள்+ நெய்; எனவே எள்ளின் நெய் என்று பொருள் தரும்.  எள் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற தனிச் சொல் வழக்கு உள்ளதே அதன் நல்ல தன்மையையும் அதிக நற்பயன் தருவதையும் உணர்த்தும். எண்ணெய் என்பது பொதுவாக அனைத்து நெய் வகைகளையும் குறிக்கத்தொடங்கி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்  என வழங்கலாயிற்று. மண்ணிலிருந்து கிடைப்பதால் மண்ணெண்ணெய் என்ற புதுச் சொல்லை உருவாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள்!  நடுவில் கொஞ்சம் இலக்கணம் படித்து விட்டோம்! இது என்ன விளக்கெண்ணெய்? என்கிறீர்களா! பாரதியார் இப்படித்தான் இலக்கணத்தை ஒதுக்கினார். மாகவி ஆகிவிடவில்லையா?
நல்லெண்ணெயில் காலை மாலை வாய் கொப்புளிக்க வாய் நாற்றம், பல்சொத்தை நீங்குவதுடன் வாய்வழியே குடலுக்கு – உடலுக்குச்-  சேரும் நோய்க் கிருமிகள் தவிர்க்கப் பெறுவதால் பிற நோய்கள் பலவும் தாக்குவதில்லை. குறிப்பாக வாதவலிகள் மூட்டு வலிகள் நீங்குகின்றன.

பெண்கள் வெள்ளிக் கிழமையும் ஆண்கள் சனிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக் கொள்வது நல்லது. சளி (சிலேட்டும) உடல்வாகு உள்ளவர்கள் குளிர் காலங்களில் அல்லது சளி பிடிக்கும் நிலையில்,  சிறிது அரிசி, ஓமம், மிளகு (அனைத்து அரை தேக்கரண்டி) இட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துகொள்க. சூட்டு உடம்பினர் நல்லெண்ணெய் அல்லது நெய், அல்லது தயிர் தேய்த்துக் குளிக்கலாம்.   

Wednesday, February 12, 2014

கிளி ஓச்சி கிளிநொச்சி

பெண்மணி மாத இதழ்

இலக்கியச் சோலை–1 / வெளிவந்தது -


                                                  கிளி ஓச்சி கிளிநொச்சி
                                                                                           -முனைவர் பா.இறையரசன்
மிகவும் அழகான அந்த ஊர்தான் கிளிநொச்சி. சிறு தெருக்களும் பெரிய வீதிகளும் செம்மண் சாலைகள்தான்.வீடுகள் நூல்பிடித்துபோல் நேர் ஒழுங்காக இருக்கும். எல்லா வீடுகளும் செங்கல் வீடுகள். நகரத்துக்கு உள்ளேயே அங்காடித்தெருக்கள். காய்க் கடை, எண்ணெய்க் கடை, துணிக்கடை  என எல்லாக் கடைகளும் அங்கே இருந்தன. இளவனர் (யவனர்) என்னும் வெளிநாட்டவர் கடைகளும் உண்டு.
மிலேச்சர் என்னும் ஆரியர்கள் வெள்ளைத்தோல் என்றாலும் குளிக்காத அழுக்கு மூட்டைகள். கயிற்றின் மேல் ஆடிப் பிழைக்கும் கழைக் கூத்தாடிகள். புத்த மதம் பரப்புகிறேன் என்று வந்த அவர்களில் பலர் கழைக் கூத்தடிகளகவும் சிலர் மரத்தடிகளின் கீழிருந்து போதிப்பவர்களாகவும் இருந்தனர். ஊரைச் சுற்றியுள்ள வயல்களில் கரும்பும் நெல்லும் தினையும் பயிராகும். பக்கத்து மலையிலிருந்து வரும் மலைக் குறவர்கள் தேனும் பலாவும் காய்கறிகளும் விற்று நெல்லும் உப்பும் துணிமணிகளும் வாங்கிச் செல்வர்.
தச்சரும் கம்மியரும் பிறரும் தொழில் செய்யும் ஓசையும் விற்பவர்கள், வாங்குபவர்கள் , அரசு  திணைக்களத்து அதிகாரிகள், வீரர்கள் என அனைவரின் பேச்சொலிகளும் கடல் ஒலிபோல் கேட்கும்.  இரவில் நடனமோ தெருக்கூத்தோ தொடங்கி விடியும் வரை நடக்கும். என்றைக்கும் மகிழ்ச்சி ஒலி கேட்ட அவ்வூர் இப்போது சாவு அமைதியில் இருக்கிறது.
வானத்தில் கோட்டைகட்டி இருப்பதாகக் கதைவிட்ட ஒரு சிறு கூட்டம் அரக்கர்களாக அவ்வூரில் புகுந்து வயல்களையும் வீடுகளையும் கொளுத்தியது; பெண்களையும் குழந்தைகளையும் கொன்றது. வீர மறவர்களோடு மட்டுமே போரிட்டுப் பழக்கப்பட்ட தமிழ்வீரர்கள் புறமுதுகிடாமல் மண்ணில் பிணமாகி உரமாயினர். தேவாரம் பாடிய கோயில் வாயிலில் அழிப்பாளர்கள் புத்தர் சிலையை நட்டுவிட்டுப் போய்விட்டனர்.
ஊரே  பிணக்காடு. கடைகள் வீடுகள் எல்லாம் தரை மட்டம். இவற்றையும் மீறி நின்ற சில வீடுகள் குட்டிச் சுவர்களாய் நின்றன. தெருவெல்லாம் எலும்பும் தசையும் குருதியும் கொஞ்சம் கொஞ்சமாக்க்  காய்ந்து செம்மண்ணைக் கருகிய சுடுகாடாக ஆக்கியிருந்தது. பல மாதங்கள் ஆகியும் அங்கு வீடுகள் எதுவும் கட்டித்தரப்பட வில்லை. ஊரைவிட்டு வெளியேறிய  பெரியவர்களும் பெண்களும் குழந்தைகளும் மட்டும் அரைகுறை உயிரோடு முற்காடுகளுக்குள் இருந்தனர்.
அதோ அந்த வீடு ஒற்றை வீடு. தனியே நிற்கிறது. அரக்கர்களின் கொடிய பார்வையில் தப்பி நிற்கிறது.  மிகப்பெரிய அறிஞராகவும்   அரசு திணைக்கள  அதிகாரியாகவும் விளங்கிய மல்லாகம் மாறன் வழுதி அம்பலம் வீடு.  அவர் வீட்டில் எப்போதும் திருவிழாபோல் கூட்டம் இருக்கும். அறிஞரும் வருவர்,  வறியவரும் வருவர். அடுக்களையில் எப்போதும் சோறுவடித்து ஊற்றும் கஞ்சி  தெருவில் மலைப்பாம்பு நெளிவது போல் பளபள என்று ஓடும். வீட்டிற்கு முன்புறம் தினை காய வைத்திருப்பார்கள். அதைக் காத்துக் கொண்டிருக்கும் கிழவிகள் ஊர்க்கதை பேசிக் கொண்டே கிளிகளையும் குருவிகளையும் விரட்டுவர். குறுக்கே வரும் குழந்தைகளையும் விரட்டிப் பிடித்துக் கருப்பஞ்சாறு கொடுத்து,  “எதிரே போய் மன்றத்தில் விளையாடுங்கள்என அனுப்புவர்.
அறம்தலைக் கொண்ட அந்தக் கலகலப்பான வீடு இன்று தனிமையில். இரவில் எப்போதாவது ஒருமுறை ஆந்தை அலறிவிட்டு அடங்கிப் போய்விடும். சாவின் அமைதியாகிப் போன அந்த முன்றிலில் இன்று தினை காயவில்லை. அந்த முற்றத்தில் இப்போது ஓர் அணில் ஓடுகிறது. சிறு ஒலி கேட்டாலும் அஞ்சி  ஓடுகின்ற அழகிய அணில் மெல்ல ஓடி அங்கே தரையில்  கிடக்கும் ஒன்று இரண்டு தினை மணிகளைத் தின்றுவிட்டுத்,  தன் முதுகைவிட மென்மையான குழந்தைகளையும்  வாலைவிட மென்மையான வெண்தலை முடியைக் கொண்ட கிழவிகளையும் தன் அழகிய காண்களில் காணாமல் சலித்துப்போய் வாய் சப்பிக் கொண்டிருந்தது.  
ஒய்யாரக் கொண்டையிட்டுக் கூந்தலிட்டுப் பூ முடித்து காலில் சலங்கை ஒலிக்க மயிலாட்டம் போல் நடைநடந்து குயில் போல் குரலெடுத்துப் பாடிக் கிளி ஓட்டிக்  காவல் காக்கும் அழகுப் பெட்டகமாகிய அந்த இளங்கொடி, தினைப்புனக் காட்டுக்குள்ளே ஆரும் அறியாமல் காதலனுடன் கூடிக்களித்துத் திருவிழாக்காலத்து ஊர் போல் மகிழ்ந்து விளையாடியவள், இன்று   தன்தலைவன் பொருள் தேடிச் சென்று விட்டதால், இப்போது ஊர்மக்கள் யாரும் இல்லாமல் போய் விட்டதால் அமைதியாகிப்போன  அந்த அணில் விளையாடும் வீட்டு முற்றத்தைப் போல் அழகிழந்து வாடி வதங்கிப் படுத்துக்கிடந்தாள்.

பாடல் காட்சி :
                       “காதலர் உழையர் ஆகப் பெரிதுவந்து
                        சாறுகொள் ஊரில் புகல்வேன் மன்ற
                        அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்
                        மக்கள் போகிய அணிலாடு முன்றில்
                        புலம்பில் போலப் புல்லென்று
                       அலப்பென் தோழிஅவர் அகன்ற ஞான்றே”.
                                                               குறுந்தொகை :41: அணிலாடு முன்றிலார்.

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers