Thursday, December 9, 2010

கல்வியும் மரக்கன்றும்

                           தெம்மாவூரில் சிங்கப்பூர் தெம்மாங்கு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து உள்ளே 10 கல் தொலைவில் படு மோசமான சாலையில் இருக்கிறது தெம்மாவூர் என்கிற சிற்றூர். அந்த ஊரையும் தாண்டி வீடுகள் குடிசைகள் எதுவுமே கண்ணில் படாத இட்த்தில் ஐந்துஆறு இளைஞர்கள் சிறு மேடை அமைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வண்டியில் பெண்கள் வந்து இறங்கினர். வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் கைகளில் சிறு இலையைக் கொடுத்து அதில் தயிர்சோறு அளித்தனர். அடுத்து வந்த வண்டியில் ரெட்டிப்பாளையம்  இசைக் கலைஞர்கள் 
சோறெல்லாம் வேண்டாம்மா என்று கூறிவிட்டு நெருப்பை மூட்டிப் பறைகளுக்குச் சூடேற்றினர். பறை ஒலிக்கு ஏற்ப அவர்கள் ஆடத்தொடங்கினர்.  தாரை, தப்பு, மேளம் 

என்று அவர்கள் அடித்த அடியில் சுற்று வட்டாரமே அதிர்ந்தது.





சிறிது நேரத்தில் அந்த மிகச்சிறிய சாலையில் ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து  சீன மாணவர்கள் கிடுகிடுவென இறங்கி ஒடோடி வந்தனர். அடுத்து மலாய் மாணவர்கள் சிலர் வந்தனர். கடைசியாகத் தமிழ் மாணவர்கள் சிலர் வந்தனர். மொத்தம் இருபது பேர் இருக்கும்,  ஆட்டம்போடத் தொடங்கினர். ஆனால் ரெட்டிப்  பாளையம் குழுவினரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் விழா தொடங்கியது.
      அறக்கட்டளையின்  செயலர் முனைவர் பா.இறையரசன் தலைமை ஏற்று எழுத்தேணி அறக்கட்டளை பற்றி விளக்கினார். பள்ளி, மாணவரில்லம் ஆகியவற்றுடன் இயற்கைஉழவு சார்ந்த விளைநிலம் என்னும் திட்டத்தில் இன்று மரக்கன்று நடும் விழா இங்கே நடைபெறுகிறது என்றும்,ம்முடைய மாணவர் சகாயராசு சிங்கப்பூர் ஃபூச்சூன் பள்ளியில் தமிழாசிரியர் ஆகி, இன்றைக்கு 20 மாணவர்களுடன் சுற்றுலா வந்துள்ளார்  என்றும் அவர் கூறியதும்தான் வந்துள்ள சீன மலாய், தமிழ் மாணவர்கள் சுற்றுலா வந்தவர்கள் என்று தெரிந்தது.

அறக்கட்டளையின் நிறுவனர் சகாயராசு வரவேற்றார். மாணவர்களிடமிருந்தோ, பெற்றோர்களிடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நன்கொடையோ கல்விக்கட்டணமோ பெறாமல் இலவயக்கல்வி தர, பள்ளி, விடுதி ஆகியவற்றுடன் அமைந்த விளைநிலத்தில் இயற்கை உழவு மேற்கொள்ளப்பெறும்; முதலில் ஆழிப்பேரலை (சுனாமி) முதலிய இயற்கை ஏதங்களால் உறவிழந்த (அனாதை) குழந்தைகள், தாழ்த்தப்பெற்ற ஊனமுற்ற ஏழை மாணவர்கள் சேர்க்கப்பெறுவர் என்று சகாயராசு கூறினார்.

              சென்னையிலிருந்து வந்திருந்த வரலாற்றறிஞர் கோ.கண்ணன் (முன்னாள் பாரத வங்கி அதிகாரி) தமிழகத்துக்கும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பைச் சீனப்பயணிகள் பதிவு செய்துள்ளனர்; சுற்றுலா வந்துள்ள சீன, மலாய், சிங்கபுர மாணவர்களை வரவேற்கிறேன் என்றார்.
சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வித்துறையின் துணை இயக்குநர் திரு அ. மதிவாணன் சீன மலாய் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் பேசினார். கல்வி, வரலாறு, இலக்கியம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் சகாயராசை விட அவரது பெற்றோரைப் பாரட்டவேண்டும் என்று கூறி அவரது தந்தையார் திரு டேவிட் அவர்கள் கையை உயர்த்தி, அனைவரையும் கைதட்டிப் பாராட்டச் செய்தார்.  “தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”  ஆகவும் “அவையத்து முந்தியிருப்பச்” செய்த தந்தையாகவும் நெகிழ்ந்தார் டேவிட். அவருக்கு ஃபூச்சூன் பள்ளி சார்பில் அப்பள்ளியின் ஆசிரியர் திரு வே. பச்சைப்பெருமாள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பு செய்தார். இசை விய ஆசிரியர் எஃசுடீ லிம் தமிழகப்பயணமும் இவ்விழாவும் மறக்கமுடியாதவை என்று கூறினார். மாணவன் தௌபீக்கும் மாணவி துரியாட்சிணியும் தங்கள் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
கல்விப் பயிர் வளர்க்கும் இம்முயற்சிக்குத் தொடக்கத்தில் இருந்தே ஒத்துழைப்பு நல்கி வரும் இயற்கை உழவியல் இயக்க இளைஞர்கள் ஆனந்தராசும் பிரசன்னாவும்  மரக்கன்றுகளைக் கொண்டு வந்திருந்தனர். பள்ளிக்கட்டடம் கட்டவுள்ள நிலத்தின் நான்கெல்லையிலும் வந்திருந்த மாணவர்களும் விருந்தினர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராகிய தங்கமணி ஆவார்.
வண்டியில் வந்து தயிர்சோறு அளித்த அந்த பெண்கள் மறுபடியும் வண்டியில் ஏதோ கொண்டு வந்தனர்; எல்லோருக்கும் அவர்கள் நெல்லிக்கனியும், சுக்குத்தண்ணியும் (காப்பியும்) கொடுத்தனர். கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை சகாயராசு என்னும் அந்த ஆசிரியரின்அக்கா, தங்கைகள்தான். வண்டியை ஓட்டிவந்தவர்கள் அவரது தங்கை கணவரும் தம்பிகளும்தான். குடும்பம் ஒரு கோயில் என்பார்கள். சகாயராசு குடும்பத்தினர் அனைவரும் ஒரு தென்னந்தோப்பாக இருந்து உலகத்தரமுடைய இலவயக்கல்வி, மாணவர் இல்லம், இயற்கைஉழவியல் உணவு உற்பத்தி ஆகிய ஆலமரத்தோப்புக்கு மரக்கன்று விழா நடத்தியுள்ளனர்.




விரைவில் செயற்கை உரமோ பூச்சிமருந்துகளோ இடாமல்  காய்கறிகளும் தானியங்களும், மூலிகைகளும் இங்கே விளையும்;  நல்ல கல்வி பெற்ற மாணவச்செல்வங்களும் தோன்றுவார்கள்.
                                         -செய்தியாளர்: அ.வள்ளி. 




Sunday, December 5, 2010

கிரந்த எழுத்துத் திணிப்புக்கு எதிர்ப்பு

natpu
டந்த நவ.3ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம், தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் பா.இறையரசன் தலைமை தாங்கினார். அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரையாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன் தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாட கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத் தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன், வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்,  பொறி. அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர்.
கூட்டத்தில்பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
1. தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்,  பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம்பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
natpu
4. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
5. அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
7. அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
8. குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.
9. உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
natpu
10. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
11. சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றி அரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின்  விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும். கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற்சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
12. நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
13. இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும்பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழர்கள் மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
natpuவரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம்பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையதளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.
தொடக்கவுரையில் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற இருந்த ஒருங்குறிக் கூட்டத்தில் கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போகமாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.
நன்றி: நட்பூ இணைய இதழ்

Saturday, November 27, 2010

“மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?”

                
சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் அமைந்திருக்கும் எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தேறியது. 
தமிழார்வலர்கள் கூடிய இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கெ.பக்தவத்சலம் அவர்கள் வரவேற்புரையில் பேசியதாவது, “தொல்காப்பியர் காலத்தில் இருந்தே பாலி மொழி இருந்தது. பின் சமஸ்கிருதமே இந்தியாவில் பெரும்பங்கு வகித்தது. அப்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக வந்ததே உருதுமொழி. சமஸ்கிருதத்திலிருந்து ஜ, , , க்ஷ, ஸ போன்ற எழுத்துகள் மிழுக்கு வந்தன.  தமிழ்மொழியை விட மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிறமொழிக் கலப்பு அதிகமாவே இருந்தது.
தமிழில் வடமொழி கலந்து மணிப்பிரவாள நடையை  சமணர்கள் உருவாக்கினர். இதை இறுதியாக வைணவர்கள் வளர்த்தார்கள். இப்படி பல மொழிகளிலிருந்த சொற்கள் தமிழை ஆக்கிரமித்து வருகின்றன. எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிடும் நீங்கள் இராசாசி எனக் குறிப்பிடுவதேன் என முரசொலிக்கு ஒரு முறை மூதறிஞர் இராசாசி மடல் எழுதினார். இராஜாஜி என எழுதத் தொடங்கினர்.

பவளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். வடமொழியாளர் தமிழை மாணிக்கமாகக் கருதினர். தமிழில் பவளம் என்பதை வடமொழியில் பிரவாளம் என மாற்றினர். இது போலவே விளக்கவுரை என்பதை வியாக்கியானம் என்றும், பாயிரம் என்பதை பிரவேசம் என்றும், வேட்டியை வேஷ்டி எனவும் மாற்றினர். பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை  ஷாட்க்ஷி என்று எழுதிவந்ததை மாற்றி  சாட்சி என எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழுக்குள் ஆங்கிலம் புகுந்துவிட்டது. இன்று தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தில் கூட அர்ஜூனனும், பீமனும் தமிங்கிலத்தில் பேசுவது தாங்க முடியாத ஒன்றாகும். எனவே தமிழர்களாகிய நாம் பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுவதோடும் பேசுவதோடும் தமிழ் அழிவைக் காப்பதும் நமது கடமையாகும்என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் பா.இறையரசன் பேசியதாவது,     “1930-களில் தமிழிசை வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள்  போராட்டம் நடத்தியதைக் கண்ட மற்ற மொழியினர் இவர்களுடைய மொழியில் இசையே இல்லையா? எனக் கேலி பேசியதுண்டு. தமிழார்வலர்களாகிய நம்மை தமிழ் உணர்ச்சி மட்டுமே வழி நடத்துகிறது. நாடெல்லாம் நடந்து தமிழைப் பரப்பிய அக்கால ஆழ்வார், நாயன்மார்களாலும் , பிற்காலத்தில் பெரியார் போன்றவர்களாலும் தமிழ் மொழியும் இனமும் பாதுகாக்கப்பட்ட. ஆனால் இன்றோ தமிழின் நிலை தலைகீழாகிப் போனது.
நான் ஆத்திகன்தான், அதற்காக சமற்கிருதத்தை விட தமிழ்மொழி குறைந்தது இல்லை. தமிழ் தாத்தா என அழைக்கப்பெறும் உ.வே.சாமிநாத ஐயரிடம் வணக்கம்என்று கூறினால் நமஸ்காரம்என்று கூறுங்கள் என்பார். கி.பி.3-ம் நூற்றாண்டில்தான் சமஸ்கிருதம் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. கி.பி.3-ம் நூற்றாண்டில்தான் ராமாயணம், மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்றன. நம்மை வேதம் படிக்கக் கூடாது என்றனர். வேதம் கி.பி.14-ல்தான் எழுதப்பட்டது.
 இன்று படிக்கின்ற குழந்தைகள் “Thosaiyamma thosai” என ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படிக்கும் அவல நிலை உள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டாமா? வடமொழியை தேவ பாஷை என்றும் தமிழை நீச்ச பாஷை என்றும் கூறி வந்தனர் சிலர். இவர்கள் தமிழில் சமற்கிருதம் கலந்து மணிப்பிரவாள நடையை ஏற்படுத்தினர். சோற்றை சாதம் என மாற்றினர்.
தமிழை வளர்க்க வேண்டும் என்கிறீர்களே, வளர்ப்பதற்கு அது என்ன தாடியா எனக் கேலி பேசுகிறார் திரைக்கவிஞர் வாலி.
அன்று சமற்கிருதம் வந்து தமிழைக் கெடுத்தது போல் இன்று ஆங்கிலம் தமிழில் புகுந்து தமிங்கலம் ஆகிவிட்டது. ற, , , ஒ என்ற இந்த ஐந்து எழுத்துக்களையும் கிரந்த எழுத்தில் சேர்க்க வேண்டும் என ஒருவர் முயல்கின்றார்; இன்னொருவர் 26 கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு சேர்க்க வேண்டும் என்கின்றார்.
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்றனர். தமிழனுக்கு இரண்டு குணம். ஒன்று ஒற்றுமையின்மை, மற்றொன்று காட்டிக் கொடுத்தல்.
ஆரிய இதழான அமுத சுரபியில் பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலேஎன்ற பாடலை ஸெந்தமிழ் நாடெனும் போதினிலேஎன எழுதி தமிழை இழிவுபடுத்துகின்றனர். மேலும் கலைஞர், திருமா, வைகோ, சீமான் போன்றோரை ஈழ மக்களின் துரோகி என எழுதி தமிழர்களுக்குள் கலகம் மூட்டுகின்றனர். மாவீரன் முத்துக்குமார், ஈழத்தமிழரைக் காக்க இறந்தபோது தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட வரவில்லை. எனது கனவெல்லாம் இனி தமிழை அறிவியல், கணினித் தமிழாக மாற்ற வேண்டும் என்பதேஎனப் பேசினார்.
இறுதியாகத் தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் பேசியதாவது : 
தமிழ் இன வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான நிகழ்விது. இணைய இதழான நட்பூபோன்ற இதழ்கள் தமிழுக்கு அரும்பணி ஆற்றி வருகின்றன. கிரந்தம் என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல்மொழி எழுத்துக்களை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால் நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமற்கிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.
மணிப்பிரவாள நடைக்காக தமிழ் எழுத்துகளில் க1, 2, 3, 4 என்பது போல் 26 கிரந்த எழுத்துக்களைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, , , , ன ஆகிய தமிழ் எழுத்துக்களையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காக்க்  கருத்துரு அளிக்கப்பட்டது.  இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகவும் கதை கூறப்பட்டது. மேலும் தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துக்களைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்துவதுதான் இதன் உள்நோக்கம்.

இப்பொழுது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் பஸ், ஜாமின், மிக்ஸி, ஜாம், ஷவர் முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்துவிட்டன. ஜ சில இடங்களில் (ஜமுனா யமுனா என்பது போல்) ய என மாறும். (ஹரி என்பது அரி எனப்படுவது போல்) ஹ என்பது அ என மாறும்.  இவ்வாறு உரிய முறைக்கேற்ப பெயர்ச் சொற்களை மட்டும் இவ்வாறு எழுதிவிட்டுப் பிற சொற்களை உரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி புஜம் தோள், ஸர்ப்பம் பாம்பு, ஸந்தோஷம் மகிழ்ச்சி, லஷ்மி திருமகள், ஹர்த்தால் மறியல் அல்ல்து கதவடைப்பு, ஸ்ரீநகர் திருநகர் என எழுத வேண்டும்.  

      இன்றைய தலைமுறையினர் தமிழில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழ்ப் பெயர் சூட்டியவர்கள் பிள்ளைகள்கூட அவ்வாறுள்ளனர். இந்தச் சமுதாய அவலத்தின் எடுத்துக்காட்டுதான் கலைஞரின் குடும்பத்தினரும் சன் டி.வி., சன் பிக்சர்ஸ்,ரெட் ஜெயண்ட், க்ளவுடு நைன் எனப் பெயர் வைத்துள்ளார்கள்;  பாரே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி நிறுவனங்கள், படத் தலைப்புகள். கதைப்பாத்திரங்களின் பெயர்கள் என அனைத்திலும் தமிழ்ப் பெயர்களையே வைக்க வேண்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாடு உள்ளதால்தான் பிற மொழிப் பெயர்களைக் கையாளுகிறோம். எனவே பாட நூல்களில் தமிழ் என்ற பெயரில் கிரந்த எழுத்துகள் புகுந்துள்ளதை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தஒழிப்பு இயக்கம் நடத்தியாவது நாம் வெற்றி காண வேண்டும்- என இலக்குவனார் திருவள்ளுவன் பேசினார்.
      இறுதியில் கேள்வி நேரம் வந்தது. வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு, மொழிச் சீர்திருத்தம் பற்றியும், மொழி வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் தமிழினை எவ்வித வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பதுபற்றியும் காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தினர். கூட்டத்திற்கு வந்திருந்த ஐம்பது பேரில் 48 பேர் முதியவர்கள் என்பதால் அடுத்த முறை இளைஞர்களை இணைக்க வேண்டும் என்றும், தமிழுக்கு உரியவற்றைச் செய்யாத ஆட்சியாளர்கள், பிறமொழிகளைத் திணிப்பவர்கள், எதிர்க்காத பொதுமக்கள் என இருக்கும் வரை தமிழ் முன்னேற முடியாது என்ற பேச்சுக்கள் அனல் வீசின. வந்த ஒரு தமிழார்வலர் ஆட்சி, அலுவல், நீதிமன்றம் போன்ற இடங்களில் ஆங்கிலமும், வடமொழியுமே ஆட்சி செய்கின்றன, தமிழுக்கு மதிப்பில்லை என குறைபட்டுக் கொண்டார். மேலும் ஒருவர் 1967-லிலேயே தமிழ் ஆட்சிக்கு வந்துவிட்டது. 43 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதுதான் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (அதுவும் 100க்கு  20 பேருக்கு) அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
இரண்டு தெலுங்கன் சந்தித்தால் தெலுங்கில் பேசுகிறான், இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறான். இரண்டு தமிழன் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறான். தமிழன், தமிழில் பேசுவதை என்று உயரியதாக நினைக்கிறானோ  அன்றுதான்  தமிழ் வாழும். இல்லையேல் பாரதி கூற்றுக்கிணங்க மெல்ல தமிழ் இனி (தமிழனால்) சாகும்!!

நன்றி: “நட்பூ” இணைய இதழ் – 24-11-2010 திரு க.சித்திரசேனன்  செய்திக்கட்டுரை.

Tuesday, November 9, 2010

கிரந்த எழுத்து தமிழில் திணிப்பு!

தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத்  தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளு  மியல்புடைய  ஆரியர்  தமிழ்நாட்டிற் கேற்றபடி,  தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’  என்னும்  பெயரிற் புதுவதோர்  இலிபி  வகுத்தனர்.. . . .  தமிழுஞ்  சம்ஸ்கிருதமுங்  கலந்த மொழி கேள்விக்கின்பம் பயக்கு  மென்ற  போலியெண்ணமே  இத்தகைய  ஆபாச மொழி  யொன்று  வகுக்குமாறு  தூண்டிற்று.”  என்று பரிதிமாற்கலைஞர் எழுதுவார்.

“பாரதி – பிறமொழிச்  சொற்களைத்  தமிழில் எழுதுவதற்கு  குறியீடுகள்  உருவாக்க  வேண்டும்  என்று  1916 – ல் ஞானபானு  இதழில்  “தமிழில் எழுத்துக்குறை” என்றத்  தலைப்பில்  எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும் , அன்போடு உறவுமுறையில் “மாமா” என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக்கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார்.

ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தை புகுத்தவும்தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும்.   வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம் ) ஈட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன். அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு,  கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து சிதைவால் தோன்றின.  இனியும் தமிழைச் சிதைக்க விடவேண்டாம்.

கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, , , ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று திரு நாக.கணேசன் முயல்கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர்கள்தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங்கு குறியில் -  தமிழின் ஒலிச்சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில்  தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 ( ,, , , க்‌ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச்  சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளியிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத்தினராலும் ஈட்டுரையாசிரியர்களாலும் கொண்டுவரப்பட்ட மணிப்பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச்சேர்த்துத் தமிழின் தனித்தன்மையைக் கெடுத்து, மேலும் கன்னடம் மலையாளம் போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் எங்களின் கருத்து.

உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்தியதால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற்காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார், டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருதசொற்களும் புகுந்து, தமிழ் மலையாளம் மொழி 2 என அழைக்கப்படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும் இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும்  செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழியியல் குறியீடுகள் போதும்.

 எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக்கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை
இன்றி இயங்கும். 
2 ஐந்து எழுத்தால் ஆன  பாடை  இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத்
தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் குறியீடுகளை (IPA - International Phonetic alphabets)
 பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும். அப்படி
இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்
3 இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங்குறியீடுகள் முதலியன ...தமிழ்
எழுத்துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த
எழுத்துகள் வலிந்து நுழைக்கப் படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.
4 கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு வன்புணர்ச்சிக்கு ஈடாகும். தமிழ்த் தாய்
சீர்குலைப்புக்கு ஏதாகும் . 
இப்படி இன்னும் அடுக்கிகொண்டே போகலாம். எப்படி இருப்பினும்,
கிரந்த எழுத்துகளின் படையெடுப்பை முறியடிக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு
மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு. 

Thursday, June 17, 2010

சிங்கப்பூரில் கவிமாலை



http://www.dinamalar.com/nri/More_picture.asp?News_id=4391&lang=ta&news_head=சிங்கப்பூரில்%20கவிமாலை%20இலக்கிய%20நிகழ்வு&detectflash=false

ஜலான்புசார் : மாதந்தோறும் நடைபெறும் கடற்கரைச்சாலைக் கவிமாலை நிகழ்வு மே 29ம் தேதியன்று சிங்கப்பூர் ஜலான்புசார் சமூக மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்க அங்கமாக யாப்பு இலக்கண வகுப்பு, ந.வீ.விசயபாரதியால் நடத்தப்பட்டது. பின்னர் இணையதள எழுத்தாளர்கள் தருமி, பிரபாகரன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை எடுத்துரைத்தனர். இவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டது. இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு : ' குற்றவாளி'. இப்போட்டியில் வள்ளியம்மை சுப்பிரமணியம், பீஷான் கலா, மலர்விழி,லலிதா சுந்தர், அகிலமணி ஸ்ரீவித்யா ஆகிய பெண்பாற் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களில் கவிஞர்கள் வள்ளியம்மை சுப்பிரமணியம், மருதமலை, புருஷோத்தமன் ஆகியோர் ரொக்கப் பரிசு பெற்றனர். 
கவிஞர்கள் பாலமுருகன், பறவாக்கோட்டை அண்ணா, ராசூ கலைவேந்தன் ஆகியோர் புத்தகப் பரிசும் பெற்றனர். தமிழரும் இலக்கியமும் என்ற தலைப்பில் முனைவர் பா.இறையரசன் சிறப்புரையாற்றினார். சிங்கையில் இலக்கிய ஆர்வலர்களிடை தமது இணையதளம் மூலமாக சிறந்த இணைப்புப் பாலமாக விளங்கி இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் கலைக்குமாருக்கு, மா.அன்பழகன் பொன்னாடை போர்த்தி பாராட்டிச் சிறப்பித்தார். தமிழக எழுத்தாளர் கவிதா ஆல்பர்ட், சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததோடு கவிமாலை அமைப்பின் பணிகளைப் பாராட்டி உரையாற்றினார். யோகா விஞ்ஞானம் பற்றி ஜீனத் சரவணன் சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியைக் கவிஞர் பாலு மணிமாறன் சுவைபடத் தொகுத்து வழங்கினார். சிங்கையின் மூத்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
-- 

Tuesday, June 15, 2010

கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரில் நாங்கள் !

வரலாற்றாய்வுப் பயணம் -  ௧௧
௨௫-௦௫-௨௦௰
(25-05-2010)


கோலாலம்பூரிலிருந்து ௩௫௦ (150) கி.மி தொலைவு கூலிம் நகரம் உள்ளது. . கூலிம் என்பத்து ஒரு மரத்தின் பெயர்.
௫ (5) மணி நேரப்  பயணம். ௩௩.௫௦ (33.50)  மலேய வெள்ளிகள் ஒரு பயணசீட்டு. மாலை ௪.௩௦  (4.30) க்குப் புறப்பட்டு இரவு  ௯.௦௦ (9.00) க்கு கூலிம் போய்ச்செர்ந்தோம். கூலிம் விடுதியில் (Koolim Inn) ௨௦௦ (200) வெள்ளிகள் கொடுத்து ௨ (2) நாள் தங்கினோம்.
கூலிம் நகரத்தில் எங்கள் காலைப் பொழுது புலர்ந்தது. நாங்கள் தங்கிய கூலிம் விடுதி எளிமையான அழகான தோற்றத்துடன் விளங்கியது. தோட்டத்திலே பெரும் பூச்சட்டியில் மரங்களை வளர்த்து வருகிறார்கள்.
மலையக நாட்டில் கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரிலிருந்து காலை ௯ (9) - மணிக்கு பூஜாங் பள்ளத்தாக்கு நோக்கிய பயணம் தொடங்கியது.  எங்கள் மகிழுந்து மலேசியாவில் செய்யப்பட்டது. நன்றாகப் பயணம் அமைந்தது. வாடகை ௧௪௦ (140) வெள்ளிகள். ஓட்டுநர் மகேந்திர ராவ்.தாய் மொழி தெலுங்கு. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறார்கள்.

கூலிம் விடுதியிலிருந்து புறப்பட்டு முதல் வேலையாக முருகன் கோயிலில் விநாயகரை வழிபட்டு முருகனை வணங்கி எங்கள் நோக்கமான கடாரம்  நோக்கிப்  புறப்பட்டோம். 100 - 150 கி.மி தொலைவு.
வழியில் தேசிய வகை "லடாங் துப்பா தமிழ்ப் பள்ளி" என்ற அழகான பெயர்ப்பலகை  விளங்கியது. பெயர்ப் பலகையைக் கண்டு எங்களையும் மீறி அது ஈர்த்து வண்டியை நிறுத்தினோம்.  பள்ளியின் உதவியாளர் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார் . தண்ணீர் மலை என்ற பெயர் கொண்டவர் தலைமை ஆசிரியர். தமிழ் இங்கு வாழ்கிறது என்று பெருமையுடன் கூறினார். இவரது பெயர் பினாங்கிலுள்ள  தண்ணீர்மலை என்ற மலையிலுள்ள முருகப் பெருமானின் பெயரைக் குறிப்பிடுவதாகும்.
 ஆங்கிலேயர்களால் ௧௯௪௭- (1947) இல் கட்டப்பட்டத் தமிழ்ப் பள்ளி. தோட்டத் தொழிலாளர்க்கு என தொடங்கப்பட்டது. இரண்டு தோட்டத்துக்கு ஒரு பள்ளி . மலாய் , சீனம், தமிழ் இம்மூன்றும் வழக்கில் உள்ளன . மலாய் மட்டுமே தேசிய மொழி. ஆனால் சிங்கப்பூரிலோ ஆங்கிலம், சீனம் . மலாய் , தமிழ் ஆகிய நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக விளங்குகின்றன.
கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட சோழப் பெருவேந்தன் இராஜ இராஜன் ஆட்சிக் காலத்தே அவன் மகன் இராஜேந்திர சோழன் தாய்லாந்து, கம்போடியா (காம்போஜம்), வியத்நாம், கடாரம், (கெடா, மலேசியா) சாவகம், (ஜாவா, இந்தோனேசியா) போன்ற நாடுகளுக்குச் சென்று, வென்று கோயில்களை அமைத்தான் !
இன்று பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் பல்லவர் கால , சோழர் கால கட்டடடக் கலைச் சிறப்பை விளக்கி அகழ்வாதாரங்களையும், மேலும் பல புகைப்படங்களையும்  காட்சிக்கு வைத்திருந்த மலையக அரசின் தொல்லியல் துறைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட   தாழிகளும், மணிகளும் பல்லவர் மற்றும் சோழர் கால சிவன் , திருமால், நான்முகன் (பிரமன் ), சக்தி, பிள்ளையார் முதலிய கடவுளர் சிலைகளும், கல்வெட்டுக்களும் கட்டடச் சிதைவுகளும் அருங்காட்சியகத்தில் உள்ளன.  அருங்காட்சியகத்தை அகழ்வுகளுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். எனவே சுற்றிலும் அகழப்பெற்றுள்ள கட்டட அடித்தளங்கள் உள்ளன.
மலையக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த புதையல்களான கோயில்களை ஒப்பிட்டுத்  தமிழ்நாட்டின் கோயிலையும், தாய்லாந்து கோயிலையும், கம்போடிய  அங்கோர்வாட் கோயிலையும், வியத்நாம் நாட்டுக் கோயிலையும், இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் உள்ள கோயிலையும் படங்கள் எடுத்து  அந்த அருங்காட்சியகத்தே வைத்துள்ளார்கள். இந்த ஐந்து நாடுகளிலும் காணப்பட்ட கோயில்களின் கட்டடக்கலை தமிழரின் கைவண்ணமே !
வெள்ளத்தால் அழியாது, வெந்தணலில் வேகாது, கள்ளத்தால் போகாது இந்தத் தமிழரின் கோயில் கட்டடக் கலை! கோபுர அமைப்பு! இன்றும் நம் தமிழர் மட்டும் அறிந்த ஒன்றே இக் கட்டடக் கலை ! உறுதியுடன் சொல்வேன் !  அறுதியிட்டு சொல்வேன் ! சவால் விட்டும் சொல்வேன் !
தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின்  தனித்துவம் வாய்ந்த தன்மையை வரலாற்று ஆய்வாளர்களும், ஏன் இன்றும் கூட நம்மில் பலரும் அறிந்து வைத்துள்ள செய்தியே ஆகும்.
தெற்கே கன்னியாகுமரி  தொடங்கி வடவேங்கடம்வரை உள்ள கோயில்  கோபுர அமைப்பும், கட்டட அமைப்பும் அதற்கு வடக்கே உள்ள கோபுர அமைப்பும் தெளிவாக  வேறுபடும் நம் தமிழரின் கைவண்ணமும் இவ்வுலகம் அறிந்த ஒன்றே!
நிழற்படங்களைக் , காணொளி (வீடியோ ) காட்சிகளை எடுத்துத் தள்ளினோம் ! கடாரம் அருங்காட்சியகம் மற்றும், தமிழர் கோயில் கட்டிய இடங்கட்கும் சென்று எடுத்த படங்களே இவை !
இன்னும் ஒரு புதிய செய்தி பூஜாங் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வரும் வழியில் சுங்கை பட்டானி என்னுமிடத்தில் ஆற்றங்கரையில் ஓர் அற்புதப் புதையல் கிடைத்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்ந்துவருகிறார்கள் .சுங்கை பட்டானி ; சுங்கை= ஆறு  பட்டானி = உழவர் . நிலைத்துள் புதையுண்ட கோயிலின் மேற்புற தோற்றம் வெளி வந்துள்ளது, சுவர்களின் பகுதிகளும் , செங்கற்குவியலும், கிடக்கின்றன .
பாருங்கள் ! தமிழர்களே ! உலகத்தோரே ! வரலாற்றாய்வாளர்களே ! கூறுங்கள் உலகிற்கு ! இக்கட்டடக் கலைக்குச் சொந்தக்காரன் தமிழனே என்று ! உரக்க உரைப்போம் ! மலேசிய நாட்டின், கெடா மாநிலத்தில் உள்ள புஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் சொல்லும் செய்தியும் இதுவே ஆகும் ! தலை நிமிர்ந்து சொல்லுங்கள் தமிழர்களே ! உலகிற்கு இவ்வுலகிற்கு !  
கடாரப் பயணத்தை முடித்து கோலாலம்பூர் அதிகாலை வந்தோம். உமாசங்கர் என்ற நண்பர் எங்களை அன்புடன் வரவேற்றுத்  தங்க ஏற்பாடு செய்தார்.

24.05.2010 மலேசியாவில் நாங்கள் !

பயணம் : 
நாள் : ௰ (10)  கோலாலம்பூரிலே !

புலவர் இளங்குமரனின் மார்சிலிங் வீட்டிலிருந்து மலையகம் (மலேசியா) காலை ௭ மணி அளவில் நோக்கி புறப்பட்டோம். மலேசியா நாட்டின் நுழைவுசீட்டு பெற்று தலைநகராம் கோலாலம்பூர் செல்லும் பேருந்தில் தேடினோம். ஓட்டுநர் ஒருவர் தம் வண்டிக்கு அழைத்தார். எமது வருகையை மலையகத் தமிழர் இளந்தமிழ் அவர்கட்குத் தெரிவிக்கத்  தொலைபேசியைத் தேடினோம். ஓட்டுநர் மீண்டும் எம்மை நாடி வந்து பொதுத்தொலை பேசியை  இயக்கும் முறை, குறியீட்டு எண் முதலியவற்றைத்  தெரிவித்து உதவினார் . 

அவரது வண்டியிலேயே ஏறிப் பயணம் தொடர்ந்தோம். வழியெல்லாம் வானுயர்ந்த பலமாடிக் கட்டடங்களும், இருபுறமும் புல்வெளிகளும் அடர்ந்த மரங்களும் பறவைகளின் ஒலிகளும் பின்புலமாக முன்னேறினோம்.

கண்ணில் ஆடு மாடுகளோ வீடுகளோ கண்ணில் படவில்லை. ஆனால் வழியெல்லாம் அழகுதமிழில்   பெயர்ப் பலகைகள் கண்ணில் பட்டன. தம்பா நிலை , நிலை, சேனை, அய்யர் குரோ முதலிய ஊர்ப் பெயர்களில் தமிழைக் கண்டோம்.

ஓட்டுநர் சுரேஷ் அன்போடு மலையகத்தமிழர் நிலை பற்றியும், புலம் பெயர்ந்து வந்துள்ள தம்போன்ற தமிழர்கள் தாய் நாட்டுத் தொடர்பு அறவே அறியாது வாழ்வது பற்றியும் ஆங்கிலச்சொல் கலவாது நல்ல தமிழில் உரையாடிக்கொண்டு வந்தார். 

கோலாலம்பூர் வந்தடைந்ததும், தாமே தொலைபேசியிட்டு இளந்தமிழ் அவர்களுக்கு நாங்கள் இறங்கிய இடம் பற்றிக் கூறினார்.

வந்து சேர்ந்தார் இளந்தமிழ் ! வேகமெடுத்தது எங்கள் வரலாற்றாய்வுப் பணி ! மின்னலென உணவகம் சென்றோம். உணவு முடித்த உடனே மலேசிய பல்கலைக் கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலு அவர்களிடம் அழைத்துச் சென்றார் . இவ்வளவு இணைப்பு ஏற்பாடுகளையும் தொலைபேசி வழியே அமெரிக்க நாட்டிலிருந்தே செய்த ஆல்பர்ட் அவர்களை நன்றியுடன் நினைந்தோம். 

பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள  தமிழ்த்துறையில் பேரா.சிங்காரவேலு அவர்கள் மிக்க ஆர்வத்துடன் கடாரம் பற்றிய செய்திகளை கட கடவென்று பொழிந்தார். தமிழ் நாட்டு வணிகர்களின் வணிக எல்லை கடல் கடந்து கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன்னரே பரந்து விரிந்து கிடந்தது. அதே போல யவனர்கள், கிரேக்கர், அராபியர் என வணிகத்தொடர்பு தமிழ் நாட்டுடன் மிகச் சிறப்பாக வைத்திருந்தனர். அதனைப் பதிவும் செய்தனர். 
கிரேக்கப் புவியியலாளர் ஏரடோஸ்தெனிசு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழ்நாட்டின் குமரித்தெய்வத்தை பற்றியும் தமிழர் அத்தெய்வத்தை  வழிபட்ட முறை பற்றியும் தன் நூலில் குறிப்பிடுகிறார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிரேக்க வணிக வழிகாட்டு நூலிலும் இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு வணிகர்களின் சிறப்பைப் பற்றி அளவளாவினோம் . சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தமிழக வணிகர்களின் கடல் கடந்த வணிகத்தைப் பற்றி நம்மால் அறியமுடிகிறது. கப்பலில் கடற்பயணம் செய்து மணிபல்லவம் ,சாவகம், போன்ற தீவுகளுக்குச் சென்று பசிப்பிணி அகற்றிப்  புத்தமதத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 

கடார நாட்டு திரு விஜய மன்னர்களிடம் தமிழக வணிகர்கள் நல்லுறவு கொண்டார்கள். வாணிகத்தைப் பெருக்க திரு விஜய மன்னர்களும் விரும்பித்  தமிழக வணிகர்களுக்கு நல்லாதரவும் கொடுத்தார்கள். அவர்கள் சீனர்களுடனும்  வணிக உறவு கொண்டிருந்தனர். அவர்கள்  வழியேதான் சீனருடன் தமிழகவணிகர்கள்  வாணிகஞ் செய்திடவேண்டிய சூழல் இருந்தது. அதனைத் தமிழ் வணிகர் விரும்பாது சீனருடன் நேரடித் தொடர்பு கொள்ள விரும்பி தம் மன்னர் சோழப் பெருவேந்தன் இராஜ இராஜனிடம் தங்கள் பிரச்சினை குறித்து முறையிட்டனர். 

மன்னனும் ஒற்றர்களை அனுப்பி கடார நாட்டு நிலை அறிந்து படைகளை இளவரசர் இராஜேந்திர சோழன் தலைமையில் அங்கு அனுப்பி எதிர்பாராமல் திடீரென்று தாக்கி திரு விஜய மன்னரை நிலைகுலைய வைத்துத் தோற்கடித்தார். கடாரத்திலிருந்து சோழநாட்டுக்குப் பெரும்பொருள்  கொண்டுவந்து சேர்த்தார் இராஜேந்திர சோழன்.
தமிழ் நாட்டு வணிகரும் மகிழ்ச்சியுடன் சீனருடன் நேரடி வணிகத்தில் ஈடுபட்டனர். சோழப் பெருவேந்தரிடம் தமிழ் நாட்டு வணிகர்களின் பெரும் செல்வாக்கு இதன் வழியே நமக்குப் புலனாகிறது.    

சீனாவில் உள்ள தக்கு-ஒ-பாவில் தமிழ்க்கல்வெட்டுக்களில், ஐநூற்றுவர், எண்ணூற்றுவர், ஆயிரத்து ஐநூற்றுவர்  என்னும் வணிகர்  குழுக்களைப் பற்றிய குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. 

அப்படிப் பல நாடுகட்கும் சென்ற தமிழ் வணிகர்கள் தம்முடன் வடமொழி தெரிந்த சிற்பிகளையும், கடவுள் வழிபாட்டுக்குத் துணையாக புரோகிதர்களையும் அழைத்துச்சென்றனர். சென்ற இடங்களில் கோயில்கள் கட்டினர். பல கல்வெட்டுக்களைத்  தமிழிலும், பிராகிருத மொழியிலும் பதிவு செய்தனர்.

இவ்வளவு செய்திகளையும் பேரா. சிங்கார வேலனாரிடம் அறிந்து கொண்டு அவருடைய ஆய்வுக் கட்டுரையையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம் !   

ஒரு வினாடி கூட தாமதியாது கடாரம் (இன்றைய கெடா மாநிலம்) நோக்கி கூலிம் செல்லும் பேருந்தில் நாங்கள் சென்றமர்ந்தோம்.  சிங்கப்பூரிலிருந்து  வரும்போது வழியெங்கும், இங்கு மலையகத்திலும் கடைகளின் பெயர்ப் பலகைகளில் நல்ல தமிழைக் கண்ட போது , தமிழ் நாட்டில் கடைகளில் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டுமென்று தமிழக அரசு கூறுவதை தமிழ்த்திணிப்பு என ஊளையிடும் குள்ளநரிகளின் கூட்டத்தை எண்ணி எண்ணி சிரித்துக் கொண்டோம்.   

கூலிம் கல்வியியல் கல்லூரியின் மொழியியல் பேராசியர் மணியரசன் பேருந்து நிலையம் வந்து எங்களை கூலிம் விடுதியில் தங்கவைத்த போது இரவு 
மணி ௰ (10) ! சிறிது கடாரங் கொண்டானைப் பற்றி உரையாடிவிட்டு உறங்கச்சென்றோம் .  

- கோ.கண்ணன் , பா.இறையரசன், தா.இளங்குமரன் 

Saturday, May 15, 2010

Historical Tour-1

                            சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம் !


எங்கள் வரலாற்றாராய்ச்சிப் பயணத்தின் முதல் நிலையாக மே திங்கள் 14 - ஆம் நாள் மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானத்தில் ஏறிச் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்தோம்.

பயணத்தின் தொடக்கத்திலேயே, தஞ்சை உறத்தநாடு அருகில் அமைந்த அழகிய சிற்றூரான தென்னவ நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் திரு செல்வராஜ் அவர்களை , அவரது இளைய மகள், பெயரனுடன் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றோம் ! சந்திப்புகளே வாழ்க்கை என்ற தத்துவத்தின்படி பண்பாட்டுக்குத் தமிழன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவன் என்ற செய்தி எங்களை வந்தடைந்தது.

அவரது இளைய மகள் அபிராமி தஞ்சையில் ஸ்டெம் செல் காப்பு நிறுவனம் நடத்திவருபவர். அவர் கூறிய ஒரு நிகழ்வையே உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

அமெரிக்க நாட்டில் நல்ல பணியில், நல்ல நிலையில் வாழ்க்கை நடாத்தி வந்த தமிழன்பர் தவறுசெய்த தன் பிள்ளையைக் கண்டித்தார். மிரட்டலையே அடித்ததாக மாற்றி காவலரிடம் மகன் சொல்ல, அப்படியில்லை என விளக்கி உண்மை நிலை உணர்த்த பெரும்பாடு படவேண்டி வந்தது. பெற்ற தாயோ தந்தையோயாயினும் தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும் .

இதற்கு அந்தத் தமிழன்பர் ஒரு வாழ்நாளில் எடுக்க வேண்டிய முடிவையன்றோ எடுத்தார் ! போதும் இந்த போலி வாழ்க்கை ! குழந்தைகளுக்குப் பண்பாட்டுத்தாக்கத்தின் ஆரம்ப நிலையே இதுவென்றால்.....மூட்டை முடிச்சுகளுடன் தமிழ்நாடு திரும்பியே விட்டார் ! அமெரிக்காவின் செல்வச் செழிப்பான வாழ்க்கைமுறைக்கு முழுக்கும் போட்டார்! பிள்ளையை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் போதும் என்ற முடிவுக்கும் வந்தார். தமிழன் தன் பண்பாட்டைக் காக்க எதுவும் செய்பவனே என்று காட்ட இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு நமக்கு வேண்டும்?

நம் வரலாற்றாசிரியர் செல்வராஜ் அவர்களின் இளைய மகள் பற்றிக் கூறியே ஆகவேண்டும். சென்னையில் அவரும், சிங்கப்பூரில் அவரது தமக்கையும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களது வேர் அவர்களது ஊரிலேயே ! இந்தச் சிறிய வயதில் அவர் தன் தாயை இழந்தாலும் வசதி வாய்ப்புக் குறைந்த தகுதியுள்ள இரு பெண்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர்களை எம்.எஸ்ஸி., பயோடெக் படிக்க வைத்து தன் குழுமத்திலேயே பணியும் கொடுத்திருகிறார் இந்த இளம் தமிழ்ப் பெண்மணி! ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு நம் தமிழ்க்குடி தொல்குடியே என உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்ற எங்களது கூற்று அவரை மேலும் தமிழின் பால் ஈர்த்தது. 2009- ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மிக அதிகமாக விரும்பிப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியத் திரு நாட்டினைப்பற்றி மைக்கேல் உட்சு என்பவர் டிஸ்கவரி அலைவரிசையில் வழங்கியதாகும். இந்த நிகழ்ச்சியில் கூறிய செய்தி: 5000 -ஆண்டுகளுக்கு மேலான மம்மியிடமிருந்து கிடைத்த மரபணுவும், உசிலம்பட்டியிலே இன்று வாழும் சில தமிழ் மக்களின் மரபணுவும் 100 விழுக்காடு (MAPPING OF GENES) ஒத்துப் போவதாகக் கண்டறியப் பட்ட அறிவியல் முடிவே அது.

விமானத்தில் உடன்வந்த சென்னை மாவட்ட நீதியரசர் ஒருவர் நாங்கள் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு வர விரும்புவதாகக் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சிங்கப் பூரின் சாங்கி பன்னாட்டு விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு இளங்குமரன் என்கிற சகாயராசு எங்களை வரவேற்று மகிழ்ந்தார். ஒளிப் படங்களும் எடுத்துத் தள்ளினார். அன்னாரின் விருந்தோம்பலை அனுபவித்து மகிழ்ந்தோம் அவர் பேராசிரியர் இறையரசனாரின் மாணாக்கரே !

தரமான சாலைகள் கார் வழுக்கிக்கொண்டே 120 கி. மி. வேகத்துக்கு மேல் சென்றது. இருமருங்கிலும், சாலையின் நடுவிலும் உயர்ந்து நிற்கும் மரங்கள் , அடுத்தடுத்து புல் வெளிகள். ஒளியை வெள்ளமெனப் பாய்ச்சும் விளக்குகள் !

சிங்கை நாட்டின் உட்லண்ட்ஸ் குடியிருப்புப் பகுதியை நாங்கள் வந்தடையும் போது இரவு மணி 10.30.

அவரின் இல்லத்தரசியும், மகள் யாழினியும், மகன்கள் இளம்கதிர் , இலக்கியன் ஆகியோரும் காத்திருந்து வரவேற்று மகிழ்ந்தனர் . இரவு விருந்து முடித்து அளவளாவிப் படுக்கைக்குச் செல்லும் போது இரவு மணி 1.00 !


நாள் – 2 : 15-05-2010

தமிழுலகம் மின்குழுமத்தின் மட்டுறுத்தர் ஐயா ஆல்பர்ட் அமெரிக்காவிலிருந்து எங்களை அழைத்துப் பேசி உலகத்தரமுள்ள ஆங்கிலத்தில் தமிழ் நாட்டு வரலாறு நாங்கள் வெளியிட இருப்பது அறிந்து மகிழ்ந்தார் ! பாவாணர் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்க இவர் செய்துவரும் இடைவிடாத முயற்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனுக்குடன் தகுந்த நண்பர்களையும் அரசு அதிகாரிகளையும், அமெரிக்க நேரப்படி வேறுபடுகின்ற இரவுபகல் பாராது எத்தனை தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு ஆவன செய்திருக்கின்றார். இவரைப் பாராட்ட எங்களுக்குச் சொற்கள் கிடைக்கவில்லையே என்று தடுமாறினோம். ஆனால் அவரோ, பாவாணர் குடும்பத்திற்குச் செய்கின்ற உதவிகளுக்கு இடையே சிலர் செய்கின்ற இடையூறுகளையும் எண்ணி வருந்தினார்.
எங்கள் வரலாற்றுப்பணி தொடர்பான பயணத்துக்கு வாழ்த்தையும் அதற்குத் தேவையான நண்பர்கள் முகவரிகளையும் அளித்து உதவினார்.

அவர் அமெரிக்காவில் இருந்தபடியே , நாமக்கல் அருகே சங்கக்காலச் சிற்றூர் அமைக்க எண்ணிய செயலை நாங்கள் எண்ணி எண்ணி வியந்தோம். பேராசிரியர் அவர்களிடமும் கலந்தாலோசித்துச் செய்கிறார்கள்.
இன்று மாலை இளங்குமரன் வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்திற்குச் சென்று வந்தோம் . மிக அழகிய சூழலைக் கொண்ட மிகப்பெரிய நான்கடுக்கு மாடி கொண்ட நூலகம். ஆனால் இது உட்லண்ட்ஸ் வட்டாரத்தின் கிளை நூலகமாம்!


        - முனைவர் பா.இறையரசன், கோ.கண்ணன், இளங்குமரன்

Monday, April 5, 2010

கெட்டிமுத்து
கேளப்பன்
கொங்கணன்
கொங்குவேள்
கொங்குநாடன்
கொண்டல்
கொல்லிவளவன்
கொல்லிவேள்
கொழுந்து
கொளஞ்சியப்பன்
கொளஞ்சியரசன்
கொளஞ்சியண்ணல்
கொளஞ்சியழகன்
கொளஞ்சிமுருகன்
கொளஞ்சிக்கொழுந்து
கொற்கைத்துறைவன்
கொற்கைப்பாண்டியன்
கொற்கைமாறன்
கொற்கைமுத்து
கொற்கைவேலன்
கொற்றவன்
கொற்றங்கொண்டான்
கொன்றைவேந்தன்
கொன்றைவேய்ந்தான்
கோச்சடையான்
கோச்செங்கணான்
கோட்புலி
கோட்புலிநம்பி
கோப்பெருநற்கிள்ளி
கோப்பெருஞ்சடையன்
கோப்பெருஞ்சோழன்
கோப்பையன்
கோபாலன்
கோமகன்
கோமதிநாயகம்
கோமான்
கோயில்பிள்ளை
கோலப்பன்
கோவலன்
கோவிந்தன்
கோவேந்தன்
கோவைவாணன்
கோவைச்செல்வன்
கோதைமார்பன்
கோதைமாறன்
கோனேரியப்பன்
கைலைஇறைவன்
கைலைமன்னன்
கைலைவேந்தன்

Tuesday, March 30, 2010

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers