Friday, July 24, 2009

அசலாம்பிகை அம்மையார்

அசலாம்பிகை அம்மையார்



பத்து அகவையிலேயே ( வயதிலேயே) கணவனை இழந்த அப்பெண்ணை வெள்ளைப் புடவை கட்டச்செய்து மூலையில் முடக்கி வைத்திருந்தார்கள். கைம்பெண் ஆனதால் பள்ளிப் படிப்பை நிறுத்தினார்கள். அவள் மேலும் படிக்க விரும்பினாள். உறவினர்கள் எதிர்த்தார்கள். தெருவில் இருந்தவர்கள் கைம்பெண் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்று தடுத்தனர். ஊரில் இருந்த மற்ற சாதிக்காரர்களும் சேர்ந்துகொண்டு எதிர்த்தனர். அப்பெண்ணின் தந்தை பெருமாளையர் தமிழ் படித்தவர். மகள் மேற்கொண்டு படிக்கட்டுமே என்று நினைத்தார்.

வீட்டுக்கே வந்து சொல்லிக்கொடுக்க ஆசிரியர் ஏற்பாடு செய்யப்பெற்றார். அசலாம்பிகை என்ற அந்தப் பெண் தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த புலமை பெற்றார். திண்டிவனம் அருகில் உள்ள இரட்டணை என்ற ஊரில் வாழ்ந்து கொண்டிருந்த பெருமாளையர் தம் மகளுக்காகத் திருப்பாப் புலியூரில் (திருப் பாதிரிப் புலியூரில்) குடியேறினார்.


அசலாம்பிகை தம்மைப் போலவே மற்ற பெண்களும் படிக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே தம்மைத் தேடி வரும் பெண்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். அவர்களிடம் பெண்கள் முன்னேற்றதிற்கான கருத்துகளைப் பேசியதுடன், அவற்றைப் பாடல்களாக இயற்றித் தந்தார். அடுப்படியே தம் வாழ்க்கை எனக் கிடக்கும் பெண்களை முன்னேற்ற, வெளியில் சென்று மேடைகளில் பேசவும் பாடவும் செய்தார். அவற்றை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் இதழ்களில் எழுதி வெளி உலகுக்கு அறிமுகம் ஆனார்.


பெண்கள் விடுதலை பற்றிய சிந்தனைகளுடன் இந்திய விடுதலை பற்றிய கருத்துகளையும் அசலாம்பிகை பேசினார். வெளியூர்க் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேச அழைத்தனர். அதனால் “திருப்பாதிரிப்புலியூர் அசலாம்பிகை அம்மையார்” என்று புகழ் பெற்றார். அவர் காலத்தில் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் ஊர்தோறும் சென்று சொற்பொழிவாற்றித் தமிழ்ப் பற்றையும் சிவ நெறியையும் பரப்பிச் சிறந்து விளங்கினார்.

அசலாம்பிகையார் மிகப்பெரும் தமிழ்ப் புலவர்கள் தலைமையிலும் அரசியல் தலைவர்கள் தலைமையிலும் சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளார். நீதிபதி ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை, நீதிபதி சதாசிவ ஐயர் முத்லியோர் தலைமையில் பேசியுள்ளார். பெண்கள் கோயில் கருவறையில் நுழைந்து வழிபடவோ சமயச் சடங்குகள் செய்யவோ தம் பெற்றோருக்கு இறுதிச் சடங்குகள் செய்யவோ விடப்படுவதில்லை. இந்நிலையில் கைம்பெண்ணாகிய அசலாம்பிகையாரைக் கோயிலின் பக்கம் நெருங்க விடுவார்களா? இறைவனைப் பற்றிப் பேசவோ புராணக் கதைகள் சொல்லவோ விடுவார்களா? எனவே அசலாம்பிகையார் வடலூர் வள்ளலாரின் பொது நெறியை உணர்ந்து பேசலானார்.

இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை ஆண்களே பேச அஞ்சிய அக்காலத்தில் துணையற்ற பெண்ணாகிய அசலாம்பிகையார் துணிந்து பேசலானார். தமிழிலக்கியச் சுவையுடனும் புராணக் கதை மேற்கோள்களுடனும் இனிமையாகப் பேசிய அவர் சொற்பொழிவைக் கேட்கத் தமிழ்ப் புலவர்களும் இளைஞர்களும் பெண்களும் ஊர்தோறும் திரண்டனர். காங்கிரஸ் மாநாடுகளிலும் சமரச சன்மார்க்க மாநாடுகளிலும் பேச அழைக்கப் பெற்றார். அகவை முதிர்ந்த காலத்திலும் ஊர் ஊராகப் பயணம் செய்து இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று சொற்பெருக்காற்றினார்.


“பண்டிதை அசலாம்பிகை அமையாரின் தமிழ் அமிழ்தை யான் இளைஞனாயிருந்த போது பன்முறை பருகினேன். திருப் பாதிரிப் புலியூரில் அத்தமிழ்த் தாயை நேரிற் கண்டு உறவாடுஞ் சேயானேன்.”

என்று திரு.வி.க. கூறுவார்.

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers